கோள்களின் அலைவீச்சிலிருந்து நம் உயிருக்கு எவ்வாறு ஆக்கமும், ஊக்கமும் கிடைக்கின்றன?*
Monday, December 7, 2020
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*
கேள்வி: கோள்களின் அலைவீச்சிலிருந்து நம் உயிருக்கு எவ்வாறு ஆக்கமும், ஊக்கமும் கிடைக்கின்றன?*
பதில்:* இந்தப் பிரபஞ்சத்தில் எந்தப் பொருளாக இருந்தாலும் அது பரமாணுக்களுடைய கூட்டு இயக்கமே. பரமாணு என்பது மிக நுண்ணிய சுழலலை. அதனால், எல்லாப் பொருள்களுமே அலைகளுடைய கூட்டு இயக்கமாகவே உள்ளன. அந்தக் கூட்டு இயக்கத்தில் பரமாணுக்களின் சுழல் விரிவுக்கேற்ப, காந்த ஆற்றல் இரசாயனங்களாக மாறிக் கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு பொருள்களிலிருந்தும் அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப பொருத்தமான அலை வந்து கொண்டேயிருக்கிறது. அது மற்றொரு பொருளிலிருந்து வரக்கூடிய அலையோடு மோதும்போது மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுறுவுதல், முன் பின்னோடுதல் என்ற ஐந்து விதமான அலையியக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.,
இந்த அலையியக்கத் தத்துவத்தைப் பின்னனியாக வைத்துப் பார்த்தீர்களானால் பிரபஞ்சத்திலிருந்து நட்சத்திரங்கள் மற்றும் கோள்களிலிருந்து – காந்த அலைகள் வந்து கொண்டேயிருக்கின்றன என்பது தெரிய வரும். எந்த நட்சத்திரங்கள், எந்த கோள்களிலிருந்து அலைகள் வருகின்றனவோ அந்தந்த நட்சத்திரங்கள் அல்லது கோள்களின் தன்மைகளையும், ஆற்றலையும் அடக்கமாகக் கொண்டிருக்கும்.
அந்த ஆற்றல் துகள் உயிர்களின் மீது மோதுகிறபோது அங்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த உயிர் வகைகள் ஒவ்வொன்றும் வருகின்ற அலைகளை எந்த அளவுக்கு வாங்கிக் கொள்கின்றன என்பது அவற்றின் கருமையப் பதிவில் அமைந்துள்ள ஈர்ப்பைப் பொறுத்தது.
உதாரணமாக 100 பூத்தொட்டியை வைத்திருக்கின்றோம். அதில் 100 விதைகளை ஊன்றுகின்றோம். ஒரே மண், ஒரே தண்ணீர் என்றாலும் அந்தந்த விதைக்குத் தகுந்தவாறு செடி வரும். அதேபோல் ஒவ்வொரு ஜீவனும் கோள்களிலிருந்து வருகின்ற ஆற்றலில் இருந்தும், உணவிலிருந்தும், காற்றிலிருந்தும், பூமியின் மத்தியிலிருந்து மேற்பரப்பை நோக்கி வருகின்ற சக்தியிலிருந்தும் அதற்கு வேண்டியதை தான் எடுத்துக்கொள்ளும்; தன்மயமாக அவற்றை மாற்றியும் கொள்ளும்.
ஒவ்வொருவரும் பிறந்தபொழுது எந்தெந்தக் கோள்களின் தொலைவு எவ்வளவு இருந்ததோ, அதற்கு ஏற்ப காந்த அலைப் பதிவுகளை என்னென்ன அலை நீளத்தில், அழுத்தத்தில் பெற்றிருந்தோமோ, அந்தந்தக் கோள்கள் பூமிக்கு அருகில் வரும்போதும், விலகிச் செல்லும்போதும் உடலில் வெவ்வேறு விதமான ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு கோள் இன்னொரு கோளோடு சேர்ந்து வரும்போது ஒரு வகையான ரசாயன மாற்றமும், மாறி வரும்போது வேறு வகையான ரசாயன மாற்றமும் கோள்களின் கூட்டமைப்பிற்குத் தகுந்தவாறு ஏற்படுத்துவதால் உடலின் சக்தி ஓட்டத்தில் மாற்றம் தோன்றும். இவ்வாறு நாம் கோள்களின் அலை வீச்சிலிருந்து சக்தியைப் பெறுகிறோம்.
வாழ்க வளமுடன்!
*அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி*
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment