தைமஸ் சுரப்பி
Friday, December 11, 2020
தைமஸ் சுரப்பி :-
இரத்த வெள்ளணுக்களில் 5 வகை உண்டு. அவற்றில் நிணவணுக்கள் (Lymphocytes) ஒரு வகை. இவற்றில் பி நிணவணுக்கள் (B–Lymphocytes), டி நிணவணுக்கள் (T–Lymphocytes) என இரு வகை உண்டு. பி நிணவணுக்கள் (B–Lymphocytes) எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன. டி நிணவணுக்களை (T–Lymphocytes) ‘தைமஸ் சுரப்பி’ (Thymus gland) உற்பத்தி செய்கிறது.
மனிதன் உள்ளிட்டப் பாலூட்டிகளுக்கு உடலில் உருவாகிற முதல் ‘நிணவகை உறுப்பு’ (Lymphoid organ) இதுதான். கழுத்தும் நெஞ்சும் இணைகிற இடத்தில், நெஞ்சு எலும்புக்குப் பின்புறமாகவும், மூச்சுக் குழாய்க்கு முன்புறமாகவும் இருக்கிறது, தைமஸ் சுரப்பி. பிரமிட் வடிவில் இருக்கிற இந்தச் சுரப்பி உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலோடு தொடர்புடையது; தொற்றும் நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது.
நாம் பிறக்கும்போது இதன் எடை 12 கிராம். இது 12 வயதுவரை மட்டுமே வளர்கிறது. அப்போது இதன் எடை 36 கிராம். அதன் பிறகு இது சுருங்க ஆரம்பிக்கும். வயதானவர்களுக்கு இது 10 கிராம் எடையில் இருக்கும். அதனால்தான் முதுமையில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்துவிடுகிறது. மனிதரைத் தவிர மற்ற விலங்கினங்களுக்குத் தைமஸ் சுரப்பி தொடர்ச்சியாக வளர்ந்து, சில ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
தைமஸ் சுரப்பியில் வலது, இடது என இரண்டு மடல்கள் (Lobes) உண்டு. ஒவ்வொன்றிலும் ஏராளமான நுண்மடல்கள் (Lobules) இருக்கின்றன. இதன் அமைப்பை வெளிப் பக்கமாகப் புறணி (Coretx) என்றும், உட்பக்கமாக அகனி (Medulla) என்றும் பிரிக்கிறார்கள். புறணியில் இளம் நிணவணுக்களும், அகனியில் முதிர்ந்த நிணவணுக்களும் இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் ‘ஹஸல் கார்ப்பசல்ஸ்’ (Hassall’s corpuscles) எனும் சிறப்பு நிணவணுக்களும் உள்ளன.
இவற்றின் வேலைதான் என்ன?
தைமஸ் சுரப்பி, டி நிணவணுக்களை மட்டுமில்லாமல், ‘தைமிக் ஹார்மோன்களை’யும் (Thymic hormones) உற்பத்தி செய்கிறது. அவற்றில் முக்கியமானவை தைமுலின் (Thymulin), தைமோஸின் (Thymosin), தைமோபாய்டின் (Thymopoietin). இவைதான் பி நிணவணுக்களுக்கும் டி நிணவணுக்களுக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊட்டுகின்றன. உடலுக்குள் நோய்க்கிருமிகள் நுழையும்போது அவற்றை எதிர்க்கின்ற எதிர்ப்பொருட்களை (Anti bodies) உருவாக்கி, அந்தக் கிருமிகளை அழிக்கவும், உடலிலிருந்து வெளியேற்றவும் நிணவணுக்களுக்குப் பயிற்சி தருகின்றன. நிணவணுக்கள் ரத்தத்தில் மட்டுமில்லாமல், நிணநீர் மண்டலத்திலும் பயணம் செய்கின்றன.
அது என்ன நிணநீர் மண்டலம்?
உடலில் ரத்தச் சுற்றோட்டத்தின் ஒரு பகுதியாக நிணநீர் மண்டலம் (Lymphatic system) இருக்கிறது. இதுவும் நோய் காக்கும் காவலனாக அமைந்துள்ளது. தந்துகிகளின் தமனிப் பகுதி ரத்தம் அதிக அழுத்தத்துடன் இருக்கும் என்பதால், அந்த ரத்தத்திலிருந்து சிறிதளவு பிளாஸ்மா, நிணவணுக்கள், சில புரதங்கள், செல்களின் சில கழிவுகள், சில கரைசல் பொருள்கள் ஆகியவை தந்துகிகளிலிருந்து வடிகட்டப்பட்டு, ஒரு வெளிர் திரவமாக திசுக்களிலுள்ள செல்களுக்கு இடையே வருகிறது. இதுதான் ‘நிணநீர்’ (Lymph). நாளொன்றுக்கு 2 - 3 லிட்டர்வரை நிணநீர் சுரக்கிறது.
இது உடலில் ஆங்காங்கே சிறு சிறு நிண நாளங்களில் சேகரிக்கப்படுகிறது. சிறிய நிண நாளங்கள் ஒன்று சேர்ந்து, பெரிய நிண நாளமாக உருவாகிறது. பேருந்து செல்லும் பாதையில் பேருந்து நிறுத்தங்கள் இருப்பதைப்போல், இந்த நாளங்கள் செல்லும் பாதையில் ‘நிணக்கணுக்கள்’ (Lymph nodes) இருக்கின்றன. குறிப்பாகத் தலை, கழுத்து, அக்குள், வயிறு, தொடை இடுக்குகள் ஆகிய இடங்களில், தோலுக்கு அடியில், ஒரு பட்டாணிக் குவியல் மாதிரி காணப்படுகின்றன. உடலில் சுமார் 600 நிணக்கணுக்கள் உள்ளன. ரத்தச்சுற்றோட்டதுக்கு இல்லாத இந்தச் சிறப்புத் தகுதி நிணநீர் சுற்றோட்டத்துக்கே உரியது.
உடல் எங்கும் ஒரு சங்கிலித் தொடர்போல் அமைந்துள்ள நிண நாளங்கள் தாம் கொண்டுவரும் நிணநீரை அருகில் உள்ள நிணக்கணுக்களில் சேர்க்கின்றன. அந்த நிணக்கணுக்களில் இருந்து வேறு புதிய நிண நாளங்கள் புறப்படுகின்றன. அவற்றில் மறுபடியும் நிணநீர் பயணிக்கிறது. இறுதியில் இந்த நாளங்கள் வலது, இடது கழுத்துப் பட்டை எலும்பின் அடியிலுள்ள சிரைக்குழாய்களில் (Subclavian veins) இணைகின்றன. அதன் வழியே ரத்த ஓட்டத்தில் நிணநீர் கலக்கிறது.
நிண நாளங்களில் வால்வுகள் உள்ளதால், நிணநீர்ப் போக்குவரத்து ஒரு திசைப் பயணமாக இதயத்தை நோக்கியே நிகழ்கிறது. நிண நாளங்களைச் சுற்றியுள்ள தசைகளின் இயக்கத்தால் இந்தப் போக்குவரத்து சாத்தியமாகிறது. அப்போது திசுக்களிலிருந்து பாக்டீரியா மற்றும் சில நுண்ணுயிரிகளை நிணநீர் உறிஞ்சிக்கொள்கிறது. அவற்றை நிணக்கணுக்கள், மண்ணீரல், தைமஸ் ஆகிய நிணவகை உறுப்புகள் வடிகட்டி வெளியேற்றுகின்றன.
இவ்வாறு நிணநீர், நிண நாளங்கள், நிணக்கணுக்கள், தைமஸ், மண்ணீரல், எலும்பு மஜ்ஜை, குடல் மற்றும் சுவாச மண்டல நிணத்திசுக்கள் போன்ற நிண வகை உறுப்புகள் அனைத்தையும் கொண்டது நிணநீர் மண்டலம். நிணநீரில்
கலக்கும் உடல் கழிவுகளை நீக்கி, நோய்க்கிருமிகளை அழித்து, அயல்பொருட்களை அகற்றிச் சுத்தப்படுத்தி, மீண்டும் அந்த நிணநீரை ரத்தத்துக்கு அனுப்புவது இந்த மண்டலத்தின் முக்கிய வேலை.
அதோடு, தந்துகிகளின் சுவரில் நுழைய முடியாத அளவுக்குப் பெரிதாக உள்ள உணவு மூலக்கூறுகள் நிண நாளங்களின் வழியே உடலுக்குள் செல்கின்றன. உதாரணமாக, குடலில் குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படும் கொழுப்பு உணவு நிண நாளங்கள் வழியாகவே ரத்தத்தில் கலக்கிறது.
நெறிக்கட்டு என்பது என்ன?
நோய்த்தொற்று ஏற்படும்போது, உடலுக்குள் புகுந்துகொள்ளும் நோய்க் கிருமிகளோடு போராடி அவற்றை அழிப்பதற்கு நிணக்கணுக்கள் நிறைய நிணவணுக்களைத் துணைக்கு அழைத்துக்கொள்கின்றன. அப்போது நிணக்கணுக்கள் கோலிக்குண்டு அளவுக்குப் பெரிதாகின்றன. இதைத்தான் ‘நிணக்கணு வீக்கம்’ அல்லது ‘நெறிக்கட்டு’ என்கிறோம். உதாரணமாக, காலில் புண் வந்தால் தொடை இடுக்கில் நெறி கட்டும். நோய்க்கிருமிகளின் பாதிப்பு மிக அதிகமாக இருந்து, அது நிண நாளங்களை அடைத்துக்கொள்ளுமானால், திசுக்களில் நீர் கோத்து, வீங்கிவிடும். பாதங்களில் நோய்த்தொற்று ஏற்படும்போது கால் முழுவதும் சிவப்பு நிறத்தில் வீங்குவது இப்படித்தான்.
உடலில் புற்றுநோய் இருந்தால், அது உடலுக்குள் பரவக்கூடிய பாதைகளில் ஒன்று நிணநீர்ப் பாதை. எந்த உடற்பகுதியில் புற்றுநோய் இருக்கிறதோ. அதோடு தொடர்புடைய நிணக்கணுக்களைத் திசு ஆய்வு (Biopsy) செய்தால், புற்றுநோய் பரவியுள்ளதா என்பது தெரிந்துவிடும். உதாரணமாக, மார்பில் புற்றுநோய் இருந்தால், அக்குளில் உள்ள நிணக்கணுக்களைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள முடியும். மார்பில் புற்றுநோய் இருந்தால், அந்த நிணக்கணுக்களை அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிடுகிறார்கள்.
Source:
Mohideen Acu Meetheen:
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment