CommodityA2Z- 18
Saturday, March 19, 2016
கமாடிட்டி A-Z தொடர் 18
தி.ரா.அருள்ராஜன்
தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.
சென்ற வாரம் ஸ்டாப் லாசை பற்றி விரிவாக பார்த்தோம். ஸ்டாப் லாஸ் போடாமல், வியாபாரம் செய்யும்போது நமக்கு வரக்கூடிய நஷ்டமே, நம் முதலின் கணிசமான பகுதியை காலி பண்ணிவிடுகிறது என்பதையும் பார்த்தோம். அவ்வாறு ஸ்டாப் லாஸ்போடாதபோது ஒரு கேப் டவுன் நிகழ்ந்தால் அது நம் நட்டத்தை உடனடியாகவே பெரிய அளவில் உயர்த்திவிடுகிறது என்றும் பார்த்தோம்.
அது எப்படி?
சென்ற வார எடுத்துக்காட்டில், நாம் தங்கத்தை ரூ.26000/- என்ற விலைக்கு வாங்குவதாக பார்த்தோம். பின் விலை படிப்படியாக இறங்கி ரூ.25600/-வரை இறங்கி நாள் முடிவில் நமக்கு ரூ.400/- நஷ்டத்தில் கொண்டு வந்துவிட்டது என்றும் பார்த்தோம். ஆனால், நஷ்டத்தில் நாம் வெளிவர மனசில்லை. எனவே அடுத்த நாள் காலைவரை காத்திருக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறோம்.
அடுத்த நாள் விலை ரூ.200/- இறங்கி ரூ.25400/- என்ற விலையில் வியாபாரம் ஆரம்பிக்கிறது.
இதைத்தான் கேப் டவுன் என்று குறிப்பிடுகிறோம்.
இப்படி கேப்டவுனில் விலை ஆரம்பிக்கும்போது, நாம் ஏற்கெனவே ரூ.400/- என்ற நட்டதில் இருந்து ரூ.600/- என்ற நட்டத்திற்க்கு உயர்த்துகிறது. இந்த நட்டம் என்பது ஒருவேளை நாம் ஒரு மெகா வாங்கி இருந்தால் (ஒரு கிலோ தங்கம்) ரூ.60000/-மாக இருக்கும்.
நேத்துதான் ஒரு லாட் எடுத்தேன், இன்னக்கி காலைல ரூ.60000/- நஷ்டம் என்று நினைக்கும்போது, மனத்திற்குள் ஏதோ பிசைகிறது. கண்ணில் ஒரு மயக்கம் தெரிகிறது. மூளை வேலைசெய்வது குறைகிறது.
என்ன செய்வது? என்ன செய்வது?
குழப்பம்.
இந்த நிலையில், ரூ.200/- என்ற அளவில் இறங்கி கேப்டவுனில் துவங்கிய தங்கம், ரூ.25400 என்ற விலையில் இருந்து படிப்படியாக இறங்க ஆரம்பிக்கிறது.
அடுத்து விலை ரூ.25300/- தொடுகிறது.
இப்போது நட்டம் ரூ.70000/-
தலை லேசாக சுற்றுகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை.
மீண்டும் விலை இறங்க ஆரம்பிக்கிறது. இன்னும் ஒரு ரூ.100/- குறைந்து, தங்கம் ரூ.25200/- தொடுகிறது.
இப்போது நட்டம் ரூ.80000/-மாக மாறுகிறது.
மனது முழுவதும் பாரம். தாங்கமுடியவில்லை. அப்பா... சாமி... முடியல....
புரோக்கரை கூப்பிட்டு, சார் வித்திருங்க, வித்திருங்க சார். என்கிறோம்.
புரோக்கர்: சார் என்ன விலைக்கு விக்கட்டும்.
நாம்: என்ன வெலையா இருந்தாலும் வித்துடுங்க சார். எங்கிட்ட எதுவும் கேட்காதீங்க சார்.
புரோக்கர் வித்தாச்சி சார்.
நஷ்டம் ரூ.80000/-
முதல் நாள் ரூ.40000/- நஷ்டத்தில் இருந்த மெகா பொஷிஷன், இப்போது கேப்டவுன் மூலம் நமக்கு ரூ.80000/- நட்டமாக மாற்றிவிட்டது.
ஒரே நாளில் இவ்வளவு பெரிய நஷ்டத்தை வாழ்க்கையில் சந்தித்தது இல்லை. பல மாதங்களின் சேமிப்பை இப்படி ஒரு நாளில் அழித்தது இல்லை.
தங்கமே ஆனாலும், வியாபாரம் என்று வரும்போது நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது இப்போதுதான் புரிந்தது.
ஆனால், ஒரே நாளில் எப்படி இவ்வளவு நட்டம்?
ரூ.80000/- நஷ்டம் என்பது, ஒரு வினாடியிலோ அல்லது ஒரு நிமிடத்திலோ வரவில்லை. ஒரு நாள் முழுவதும் காத்திருந்தபோதுதான், அது படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது. முதலில் இந்த நஷ்டம் சில ஆயிரங்களில் ஆரம்பித்து பின்பு ரூ.5000/- மற்றும் ரூ.10000/- என்று அதிகரித்து பின்பு ரூ.40000/- என்ற எல்லையை அடைந்தது.
நாம் நினைத்திருந்தால், நட்டத்தை ரூ.5000/-திலோ அல்லது ரூ.10000/-திலோ தடுத்து நிறுத்தி இருக்கமுடியும்.
ஆனால், நாம்தான் தடுத்து நிறுத்தவில்லை. ஏனெனில், நாம், நட்டம் என்பதையே ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை. இறங்கிய விலை மீண்டும் ஏறிவிடும் என்று நாம் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். அதுவும் நடக்கவில்லை.
அது போகட்டுங்க....
அடுத்த நாள் கேப்டவுன் ஆனாதால்தான் எனக்கு கூடுதலாக ரூ.40000/- நட்டம். அதுமட்டும் நடக்காமல் இருந்தால் எனக்கு இவ்ளோ நட்டம் வந்துருக்காதுங்க.
சரி, இனி கேப்டவுன் அப்படின்னா என்ன? அதை எப்படி சமாளிக்காலம் என்று பார்ப்போம்.
கேப்டவுன் என்பது நேற்றைய முடிவு விலையில் இருந்து, இன்றைய காலை வியாபாரத்தின் முதல் வியாபாரமானது கணிசமான அளவு இறங்கி வியாபாரமாக துவங்கினால் கேப்டவுன் என்று சொல்கிறோம்.
நேற்றைய முடிவு விலை: ரூ.25600/-
கேப்டவுன் ஓபன்
இன்றைய ஆரம்பவிலை: ரூ.25400/-
பொதுவாக கேப்டவுன் என்பது விலையில் நிகழும் வலிமை குன்றுதலை காட்டுகிறது. இந்த வலிமை குன்றுதல் பொதுவாக தொடர வாய்ப்புள்ளது. அவ்வாறு தொடர்ந்தால், விலையானது, தொடர்ந்து இறங்க ஆரம்பிக்காலம்.
இந்த வலிமைகுன்றுதலுக்கு பிறகு என்ன நடக்கலாம் என்று விரிவாக பார்ப்போம்.
நேற்றைய முடிவு விலை:
இன்றைய ஆரம்பவிலை:
முதல் ஒருமணிநேர கேன்டில்
விலையானது இன்று காலை கேப்டவுனில் துவங்கிய பிறகு நாம் ஒரு மணிநேரம் காத்திருக்கவேண்டும். (சில நேரங்களில் இது அரைமணி நேரம்கூட போதுமானதாக இருக்கும்.)
இந்த காத்திருப்பால் என்ன நிழலாம்?
கேப்டவுனில் துவங்கிய விலையின் இறக்கம், ஒரு முடிவுக்கு வரலாம். அதாவது, கேப்டவுனில் விலை துவங்கியவுடன், இது பலபேரை மேலும் விற்பதற்க்கு தூண்டலாம். இவ்வாறு தூண்டபடுவதால், அவர்கள் விற்பனை, விலையை இன்னும் இறங்குவதற்க்கு காரணமாக அமையலாம். எனவே கேப்டவுன் நிகழ்வால், விற்கவேண்டும் என்று நினைப்பவர்கள் விற்பனை முதல் அரைமணி நேரத்திலோ அல்லது ஒரு மணிநேரத்திலோ முடிவுக்கு வரலாம்.
இந்த உடனடி விற்பனைகள் என்பது முடிவுக்கு வந்த பிறகு, சந்தை நிலை பெற துவங்கலாம். அதாவது, கேப்டவுனின் மூலம் நிகழ்ந்த நீஜெர்க் ரியாக்க்ஷன் முடிவுக்கு வந்ததாக எடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு சந்தை, இப்போது இறங்கிய இறக்கம் தேவையான இறக்கமா அல்லது தேவைக்கு அதிகமாக இறங்கிவிட்டதா என்று முடிவு செய்யும்.
அது என்ன சந்தை முடிவு செய்யும்? யார் இந்த சந்தை?
அட... அது நீங்களும் நானும்தாங்க. சந்தையில் பங்கெடுப்பவர்கள் முடிவு செய்வது. இந்தையில் பங்கெடுப்பவர்கள் லட்சக்கணக்கான மக்கள். இதில் தனிநபரும், நிறுவனங்களும் அடங்கும். ஒவ்வொருவருக்கும் சந்தைசார்ந்த கருத்துக்கள் இருக்கும். அதாவது,
1.இந்த விலை நியாயமான விலை,
2.இந்த விலை தேவைக்கு அதிகமாக ஏறிவிட்டது,
3.இந்த விலை தேவைக்கு அதிமாக இறங்கிவிட்டது.
இந்த மூன்று கருத்துக்கள்தான் சந்தையில் பங்கெடுப்பவர்களின் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். இந்த கருத்துக்கள் அடிப்படையில்தான், இந்த கருத்தை உடையவர்களின் செயல்பாடுகள் என்னவாக இருக்கலாம்?
1.தற்போதைய விலை நியாயமான விலை என்று நினைப்பவர்கள் அதிகமா இருந்தால், சந்தையில் விலை பெரிய ஏற்ற, இறக்கங்கள் இல்லாமல், ஒரு பக்கவாட்டு நகர்வில் இருக்கும்.
2.தற்போதைய விலை தேவைக்கு அதிகமாக ஏறிவிட்டது என்று நினைப்பவர்கள் அதிகமாக இருந்தால், அவர்கள் விற்பவர்களாக மாறி விலையானது இறங்க ஆரம்பிக்கும்.
3.தற்போதைய விலையானது, தேவைக்கு அதிகமாக இறங்கிவிட்டது என்று நினைப்பவர்கள் அதிகமாக இருந்தால், அவர்கள் வாங்குபவர்களாக மாறிவிடுவார்கள். இதனால், விலையானது ஏற ஆரம்பிக்கும்.
பொதுவாக சந்தையின் செயல்பாடுகள் என்பது, பெருபான்மையானவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்களோ அந்த திசையில் நகரும். அதாவது, பெரும்பான்யானவர்கள் வாங்குபவர்களாக இருந்தால், சந்தை ஏறுமுகமாக இருக்கும். பெரும்பான்மையானவர்கள் விற்பவர்களாக இருந்தால், சந்தை இறங்குமுகமாக இருக்கும். பெரும்பான்மையானவர்கள் சந்தையில் பங்கெடுக்கவில்லையென்றால், சந்தை பக்கவாட்டு நகர்வில் இருக்கும்.
இப்போது நம்முடைய கேப்டவுன் எடுத்துக்காட்டுக்கு வருவோம்.
தங்கம் கேப்டவுனில் இறங்கிய பிறகு, முதல் அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் காத்திருக்கவேண்டும் என்று கூறினேன் அல்லவா!
இந்த முதல் ஒரு மணிநேரம் என்பது பொதுவாக அவசரகுடுக்கைகள் அல்லது முந்திரிகொட்டைகள் செயல்பாடுகளுக்கான நேரமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு மணிநேரத்தில், முடிவெடுக்கும் நபர்கள் எல்லாம், முடிவெடுத்துவிடுவார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த ஒரு மணிநேரத்திற்கு பிறகு, சந்தை அறிவுபூர்வமாக யோசிக்க ஆரம்பிக்கும் கூட்டம் நிரம்பியதாக இருக்கும். இந்த கூட்டம் மிக வலுவான கூட்டம் ஆகும். இவர்களின் செயல்பாடுகள் சந்தை தொடரந்து ஒரே திசையில் பயணிக்கும்வண்ணம் இருக்கும்.
இனி, ஒரு மணிநேரத்திற்க்கு பிறகு என்ன, நடக்கலாம்.
நேற்றைய முடிவு விலையில் இருந்து கேப்டவுன் துவக்கம் என்பதே, விலையில் கணிசமான இறக்கமாக இருக்கலாம். அவ்வாறு ஏற்கெனவே நன்கு விலை இறக்கிய நிலையில், முதல் ஒரு மணிநேரத்தில் உணர்வுபூர்வமாக முடிவெடுக்கும் கூட்டத்தால், விலை இன்னும் வலுவாக இறங்குகிறது. இந்த இறக்கும், கேப்டவுன் இறக்கத்தை போன்று இன்னும் ஒரு மடங்கு இறங்கலாம்.
எனவே குறுகிய காலத்தில், விலையானது, மிகப்பெரிய அளவில் இறங்கலாம். இவ்வாறு இறங்கும்போது, சந்தையில் விலையானது தேவைக்கு அதிகமாக இறங்கிவிட்டதாக நினைக்கும் கூட்டம் அதிகமானால், அவர்கள் வாங்குபவர்களாக மாறிவிடுவார்கள். அவ்வாறு வாங்குபவர்கள் அதிகமானால், விலையான ஏற ஆரம்பிக்கும்.
நேற்றைய முடிவுவிலை
இன்றைய ஆரம்பவிலை
முதல் ஒருமணிநேர கேன்டில்
விலை தேவைக்கு அதிகமா இறங்கிவிட்டது என்றால்? வாங்குபவர்கள் கூட்டம் அதிகமாகி, விலையானது, இறங்கும் திசையில் இருந்து மீண்டும் மேல்நோக்கி திரும்புகிறது. பின்பு படிப்படியாக ஏற ஆரம்பிக்கிறது. இவ்வாறு ஏறும்போது, முதலில், ஒரு மணிநேரத்தின் அதிகபட்சவிலையில் தடுக்கப்படலாம். அதையும் தாண்டி ஏறும்போது, விலை வலிமையாக மாற ஆரம்பித்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.
கேப்டவுனில் துவங்கியவிலை ஒரு மணிநேரத்திற்கு பிறகு வரும் கேன்டிலின் அதிகபட்சவிலையை தாண்டி ஏற ஆரம்பிக்கும் இடம் வாங்குவதற்க்கு தகுதியான இடமாக பார்க்கலாம். இங்கிருந்து விலை தொடரந்து மேலே ஏறி, நேற்றைய முடிவுவிலையை நோக்கி நகரலாம். நேற்றைய முடிவுவிலை என்பது அடுத்தக்கட்ட தடைநிலையாகவும் இருக்கலாம். அந்த இடத்தில் கொஞ்சம் லாபத்தை வெளியே எடுக்கலாம். அதன் பின் முந்தையநாள் முடிவுவிலையையும் தாண்டி ஏற ஆரம்பித்தால், அதுகட்ட வலிமையான ஏற்றத்திற்க்கு தன்னை தயார்பண்ணிக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.
முதல்கட்டமாக ஒருமணிநேரத்தின் உச்சத்தை தாண்டியவுடன், வாங்க தவறியவர்கள், முந்தையநாள் முடிவுவிலையை தாண்டியவுடன், கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்தி வாங்கலாம்.
நேற்றைய முடிவு விலை
இன்றைய ஆரம்பவிலை
ஒரு மணிநேர கேன்டில்
முந்தைய நாள் முடிவுவிலையை தாண்டி விலைஏறியுவுடன், மதில்பூனையாக இருந்தவர்களும் வாங்குபவர்களாக மாறிவிடுகின்றனர். எனவே சந்தையில் வாங்குபவர்கள் கூட்டம் இன்னும் அதிகமாக மாறி, விலையானது இன்னும் வலுவாக ஏற ஆரம்பிக்கிறது.
ஒரு கேப்டவுனை எப்படி சமாளிக்கலாம் என்பதை இதுவரை பார்த்தோம். அதற்க்கு ஒரு எடுத்துக்காட்டும் பார்ப்போம்.
மேலே உள்ள வரைபடம் கோல்ட் டிசம்பர் 2014 கான்டிராக்ட் மணிதுளி வரைபடம் ஆகும்.
இதில் 10.11.14 அன்று தங்கம் விலை இறங்கி முடிந்துள்ளது. அடுத்த நாள் 11.11.14. அன்று விலை கேப்டவுன் மூலம் இறங்கி துவங்கி உள்ளது. முதல் ஒருமணிநேரத்தின் கேன்டிலின் உச்சத்தை தாண்டி ஏற ஆரம்பித்தவுடன் அதை முதல் வாய்ப்பாக பார்க்கவேண்டும் என்று கூறி இருந்தேன். பின் தொடர்ந்து ஏறியபோது முந்தையநாள் முடிவுவிலையையும் தாண்டி ஏறிக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். இதை வாங்குவதற்கான இரண்டாம் வாய்ப்பாக பார்க்கவேண்டும்.
இந்த கேப்டவுனை இன்னும் எவ்வாறு செம்மையாக கையாளலாம் என்று அடுத்த வாரம் பார்க்கலாம்.
Source:
http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=8867
0 comments:
Post a Comment