மனம் என்னும் மாமருந்து!
Sunday, August 20, 2023
மனம் என்னும் மாமருந்து!
அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்
ஒன்றே ஒன்றை மட்டும் மறந்து விடக்கூடாது..
எண்ணங்களில் சரி, தவறு கிடையாது. அவற்றை உருவாக்குவது நாம் இல்லை. எனவே, அவற்றுக்காக நாம் வருந்தவோ பொறுப்பேற்றுக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லை.
எல்லாம் சரிதான், இப்படி எண்ணம் - சிந்தனைக்கான வேறுபாடுகளை புரிந்துகொண்டு, அவற்றைக் கையாள்வதால் என்ன பயன்? அதற்கும் நோய்கள் குணமாவதற்கும் என்ன தொடர்பு?
இதனை புரிந்துகொள்ள, நாம் இதுவரை பார்த்த விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.
உடல் தன்னைத்தானே குணமாக்கிக் கொள்ளும் தன்மை படைத்தது. நம்முடைய முறையற்ற வாழ்க்கை முறையால் நாமே உருவாக்கிக் கொள்ளும் எல்லா நோய்களையும் உடலால் குணப் படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறு குணமாக்கும் முயற்சியைத்தான் பராமரிப்பு சக்தியின் பணிகள் என்று நாம் புரிந்து கொள்கிறோம்.
உடலின் பராமரிப்பு சக்தி தன்னுடைய வேலையை முழுமையாகச் செய்ய வேண்டுமானால், நாம் அதன் பணிகளில் குறுக்கிடக் கூடாது. நாம் குறுக்கிடுவது என்பது உடலின் மூலமாகக் குறுக்கிடுவதையும்,
மனதின் மூலமாகக் குறுக்கிடுவதையும் குறிக்கிறது.
. இயற்கைக்கு மாறான எந்தவிதமான பழக்க வழக்கங்களால் நமக்கு தொந்தரவுகள் ஏற்பட்டதோ.. அதே பழக்கங்களை தொடர்வதும், உடல் வெளியேற்ற விரும்பும் கழிவுகளை அடக்கி வைக்க முயற்சிப்பதும் உடல் ரீதியான குறுக்கீடுகள் ஆகும்.
உடலை சமநிலையில் வைத்திருப்பதைப் போலவே மனதை சமநிலையில் வைத்திருப்பதும் பராமரிப்பு சக்தியின் மிக முக்கியப் பணியாகும். கோபம், துக்கம், கவலை, மகிழ்ச்சி, பயம்.. இவை அனைத்தும் உணர்ச்சிகளாக மாறும்போது மனம் சமநிலை தவறுகிறது. தொடர்ந்து மனச்சமநிலை பாதிக்கப்பட்டால், அதனை இயல்பிற்குக் கொண்டுவர பராமரிப்பு சக்தி அதிக அளவில் தன் ஆற்றலைச் செலவளிக்கிறது.
சாதாரணமாக உடலில் தோன்றும் ஒரு காயத்தை எவ்வித மருத்துவ உதவியும் இன்றி பராமரிப்பு சக்தி சில நாட்களில் ஆறவைக்கிறது. ஆனால், காயம் பற்றிய பயம் மனதில் தோன்றி மனச் சமநிலை குலையும்போது, காயத்தை குணமாக்க வேண்டிய பராமரிப்பு சக்தியின் ஆற்றல் பயத்தைப் போக்குவதற்காக செலவழிந்து விடுகிறது. சில நாட்களில் தானே குணமாகி இருக்க வேண்டிய காயம், பயம் என்னும் உணர்ச்சியால் நீடித்த காயமாக மாறுகிறது.
உடல் தன் இயல்பில் இயங்க வேண்டுமானால், மனமும் தன் இயல்பில் இயங்கவேண்டும். மனம் தன்னியல்பில் இருக்க வேண்டுமானால், நம் சிந்தனையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையை நாமே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
எண்ணத்தில் பயம் வருவது இயற்கை. எண்ணத்தில் எது வேண்டுமானாலும் வரலாம். அதனால் பாதிப்பு எதுவும் இல்லை. அவை அனைத்தும் உணர்வு நிலையில் இருப்பவை. அவற்றால் உடலுக்கோ, மனச்சமநிலைக்கோ கேடு ஏற்படுவதில்லை. ஆனால், எண்ணத்தில் தோன்றும் பயத்தை சிந்தனையில் அனுமதித்தால் மனச்சமநிலை குலைந்து பராமரிப்பு ஆற்றலை வீணாக்கும். நோய் இருப்பவர்கள், நீடித்த நோயாளியாக மாறுவார்கள். நோயற்றவர்கள், நோயை தாங்களே வரவழைத்துக் கொள்வார்கள்.
மனச்சமநிலை என்பது 'பாசிடிவ் தாட்' என்று சொல்லப்படும் நல்லெண்ணத்தைக் குறிப்பதில்லை. எண்ணத்தில் தோன்றும்
அனைத்தையும் ஏற்றுக்கொள்வதும், அவற்றுக்கு எதிராக போராடாமல் இருப்பதுமே மனச்சமநிலை ஆகும்.
ஒரே ஒருமுறை மனச் சமநிலையை அறிவு ரீதியாகப் புரிந்து கொண்டால், அது நிரந்தரப் புரிதலாக மாறி, எண்ணங்களைக் கையாளும் எளிய கலை நமக்குக் கைகூடுகிறது.
நாம் நூலின் துவக்கத்தில் பார்த்த, அற்புதங்கள் அனைத்தும் மனச்சமநிலையில் நிகழ்ந்தவை. உடலின் பணிகளில் மனம் குறுக்கிடாதபோது நடந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தேவையற்ற எண்ணங்களை சிந்தனைகளாக மாற்றிக் கொள்ளும்போது 'நோசிபோ' என்னும் நாசமாக்கும் விளைவு தோன்றுகிறது. மன ஆற்றலையும் உடல் ஆற்றலையும் வீணடிக்கிறது.
நாம் மனதைப் புரிந்து கொண்டால் உடலைப் புரிந்துகொள்வது எளிது. ஏனென்றால், உடல்தான் மனமாகவும் இருக்கிறது. உடல், கண்ணுக்குத் தெரிகின்ற மனம். மனம், கண்ணுக்குத் தெரியாத உடல்!
மனதினுடைய திட வடிவம்தான் உடல். உடலினுடைய ஆற்றல் வடிவம்தான் மனம். ஒன்றைச் சீர்குலைத்தால் மற்றொன்றும் சீர்குலையும்.
இயற்கை விதிகளைப் பின்பற்றினால் உடல் நலத்தோடு வாழமுடியும். எண்ணங்களைக் கையாளத் தெரிந்தால் மன பலத்தோடு வாழமுடியும். ஏனெனில், நலம்தான் பலம்.
புற உலகும் அக உலகும் தன்மையில் வேறு வேறானவை. புற உலகில் போராட்டமும், அக உலகில் நீரோட்டமும் அவசியம். உடல் தன்னைக் காக்க போராடுகிறது. மனம் இயல்பில் இருக்க நீரோட்டத்தைப் போல இருக்க வேண்டும்.
இயல்பான மனதோடு வளமாக வாழ்வோம்.PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment