Powered by Blogger.

குறட்டை பிரச்சினை ஏன்

Monday, November 16, 2020

 குறட்டை  -:############# நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. விழித்திருக்கும்போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது?


தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான். இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்தது.


அடுத்து, மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது.


என்ன காரணம்?


சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, அடினாய்டு/டான்சில் வளர்ச்சி, மூக்கு இடைச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்சினை, உடல் பருமன், கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணிகள் குறட்டை ஏற்பட வழிவகுப்பது உண்டு. புகை பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவதுண்டு.


ஆபத்தானதா?


குறட்டையைச் சாதாரணமானது என்று அலட்சியப்படுத்தவும் முடியாது. இதில் ஆபத்தும் உள்ளது. குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், அடிக்கடி கூடிக் குறைவதுடன், சில நேரம் அறவே சத்தம் இல்லாமல் போவது ‘அப்ஸ்டிரக்டிவ் ஸ்லீப் ஏப்னியா’ (Obstructive Sleep Apnea) எனப்படும்.


அப்போது மூச்சுக் குழாயில் முற்றிலுமாக அடைப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்த சுவாசமும் நின்றுவிடும். இதனால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்றுவிடும்.


ஆனால், இந்த மாதிரி நேரத்தில் மூளை விழித்துக்கொண்டு, உடலில் ஒருவித அதிர்வை உண்டாக்கி, சுவாசப் பாதை மீண்டும் திறந்துகொள்ள வழி செய்துவிடுகிறது. இதனால்தான், தூங்கிக் கொண்டிருப்பவரின் குறட்டைச் சத்தம் திடீரென்று நின்றுவிடுவதும், அடுத்த சில நொடிகளில் அவர் உடம்பைக் குலுக்கிக்கொண்டு மீண்டும் சுவாசிக்கத் தொடங்குவதும் நிகழ்கிறது.


இதில் சில ஆபத்துகளும் உள்ளன. இவர்களுக்கு இரவில் தூக்கம் கெட்டுவிடும். காலையில் எழுந்ததும் கடுமையாகத் தலைவலிக்கும். பகலில் புத்துணர்வே இல்லாமல் தூங்கி வழிவார்கள், வேலையில் கவனக்குறைவு ஏற்படும், ஞாபக மறதி உண்டாகும். இந்த நிலைமை நீடிக்கும்போது, இதயத் துடிப்பில் பிரச்சினை ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும், நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல நோய்களும் கைகோத்துக்கொள்ளும்.


தடுக்க என்ன செய்யலாம்?


# தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும்.


# மல்லாக்கப் படுக்க வேண்டாம்.


# ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்.


# உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.


# தைராய்டு பிரச்சினைக்கு இயற்கை வழி தீர்வு எடுக்க வேண்டும்.


# மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.                            

#காலையில் சுவாசப் பயிற்சி செய்ய வேண்டும்.

# தேவையில்லாமல் தூக்க மாத்திரை சாப்பிடக் கூடாது

Source

Mohideen Acu Meetheen:


 

PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP