வாழ்க வளமுடன்
Wednesday, August 24, 2016
"வாழ்க்கைப்பயணம் வெற்றிபெற "
ஊர்ப்பயணத்தின் நோக்கத்தை அறிந்து அதை மறவாமல் பயணத்தை மேற்கொண்டு வெற்றிபெறுவதுபோல்,வாழ்க்கைப்பயணத்தின் நோக்கத்தை அறிந்து வாழ்க்கையை நடத்துபவர்கள், எளிதாக
வெற்றி பெறுகிறார்கள்.
வாழ்க்கையில் வெற்றி என்பது, "உலகஇன்பங்களை அனுபவித்து மனநிறைவு பெறுவதே" ஆகும்.
பொருளீட்டி, திருமண வாழ்க்கைத்துணையோடு, ஐம்புலன் இன்பங்களையும் அனுபவித்து நன்மக்கட்பேறுபெற்று, அவர்களுக்கும் இல்லறவாழ்வை அமைத்துக் கொடுப்பதோடு இல்லறவாழ்க்கையின் கடமையும் நோக்கமும் முடிந்து விட்டதாக பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள்.
இவர்களின் பொருளின்ப ஆசைகள் யாவும் நிறைவு பெறாமலேதான் மரிக்கிறார்கள்.
ஆத்மசாந்தி என்னும் மனநிறைவு நிலையை இவர்களின் மனம் அடைவதில்லை! ஆகையினால்தான் இவ்வாறு வாழ்ந்து முடிந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிறர் வேண்டுகிறார்கள்.இதிலிருந்து இவர்கள், வாழ்வின் நோக்கமாகிய "மனநிறைவை" அடையாமலேதான் மறைகிறார்கள் என்பது நன்கு விளங்குகிறது.
மனநிறைவு என்னும் வாழ்வின் நோக்கத்தை அடைவது என்பது என்ன ? என்று விளங்கிக்கொள்வோம்.
இல்லறவாழ்க்கையில் பொருளுறவு பாலுறவு சிற்றின்பங்களை ஐயறிவால் அனுவிக்கும் மனம், புலன்கடந்து சிந்தித்து ஐயறிவுக்கு மறைவாக உள்ள ஆன்மாவையும், இன்பதுன்ப உணர்வாகிய தன்னையும் ஒன்றாக சிந்தித்து அறிந்து கொள்ளும்போது "நிறைவுநிலை"என்னும் பேரின்பநிலையை "வெற்றிநிலையை" அடைந்துவிடுகிறது.
பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்ப ஆசைகளோ, மரணபயமோ மனதிற்கு இருக்காது. மனநிறைவு (மோட்சம்) என்னும் நிலைத்த இன்பத்தில் மனம் இயங்கும்.
வாழ்க வளமுடன்