Powered by Blogger.

Commodity A2Z-24

Monday, March 14, 2016

கமாடிட்டி வியாபாரம் 24

தி.ரா.அருள்ராஜன்

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

கமாடிட்டி வியாபாரத்தில், நாம் வெற்றி பெறுவதற்கான திறவுகோல்களை பற்றி தொடர்ந்து படித்து வருகிறோம்.

சென்ற வாரம் லாபத்தை எடுக்கும் காலத்தை பற்றி படித்தோம்.

அதாவது நம் கமாட்டிட்டியில் வியாபாரம் செய்யும்போது, டே டிரேடராகத்தான் பெரும்பாலும் இருக்கிறோம். ஆனால், நம்முடைய நிலைமை எப்போது மாறுகிறது?

கமாடிட்டி டிரேடிங் என்பது பொதுவாக வியாபாரம் என்பது நாம் அறிந்ததே.

நாம் ஒரு கமாடிட்டியில் பொஷிஷன் எடுத்த பிறகு நாம் லாபத்தில் இருந்தாலும், கடைசியில் அது நட்டத்தில் போய் முடிகிறது. அதுவே பொஷிஷன் எடுத்த பிறகு, நட்டத்தில் இருந்தால், கடைசியல் அது பெரிய நட்டத்தில் முடிகிறது.

இப்படி நாம் டிரேட் பண்ணும்போது பெரும்பான்மையான நேரத்தில், நட்டத்தில் முடிவதற்க்கான காரணங்களும், அதை சரி செய்து, எப்படி லாபத்தில் கொண்டு போய் முடிப்பதுதான் நம் நோக்கம்.

இப்போது டிரேடிங்கிற்க்கு வருவோம்.

நம்முடைய டிரேடிங்கின் நோக்கம் என்பது லாபம் பார்ப்பதுதானே?

எனவே நாம் லாபம் எடுப்பதை என்பதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

    இலக்கு வைத்து லாபத்தை எடுப்பது.

    எவ்வளவு லாபம் எடுக்கமுடியுமோ, அந்த அளவிற்க்கு அதிகபட்ச லாபம் எடுக்க முயல்வது.

இந்த இரண்டு வழிமுறையில் லாபம் எடுப்பது பற்றி பார்ப்போம்.

இலக்கு வைத்து லாபம் எடுப்பது:

நான் இன்று வியாபாரம் செய்ய விரும்புகிறேன். எனக்கு தினம் ஒரு குறிப்பிட்ட லாபம் தேவைப்படுகிறது. நான் ரிஸ்க் எடுக்க நினைக்கும் அளவு லாபம் வந்தால் போதுமானது.

அதாவது, நான் ரூ.500/- ரிஸ்க் எடுக்க நினைக்கிறேன். எனக்கு ரூ.500/- லாபம் வந்தால் போதுமானது. நான் ரூ.1000/- ரிஸ்க் எடுக்க நினைக்கிறேன். எனக்கு ரூ.1000/- லாபம் வந்ததால் போதுமானது. இது சந்தையினுடைய முழுவீச்சை பற்றி கவலைப்படாமல், எனக்கு தேவையான லாபம் வந்தால், நான் அந்த லாபத்தை எடுத்துவிடுவேன்.

அதாவது ‘கண்ணில் பார்த்த லாபத்தை கணக்கில் கொண்டு வந்துவிடுவேன்’.

ஆக நாம் இங்கே நமக்கு என்ன லாபம் வந்தால் போதுமானது என்று நினைக்கிறோமோ அந்த லாபத்தை மட்டும் எடுத்துவிட்டு நம்முடைய வியாபாரத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடுவது.

இந்த முறையில் லாபத்தை எடுப்பது என்பது, எல்லோருக்கும் சாத்தியமே.

நான் சொல்வது எல்லோருக்கும் சாத்தியம் என்று சொல்லுவது கேட்பதற்க்கு எளிதாக இருந்தாலும், ஒரு லாபத்தை பார்த்த பிறகு நாம் கட்டுப்பாடுடன் இருப்போமா?

இந்த கேள்விக்கு பதில்....... ................ ....................

அட, நீங்கதான் சொல்லனும்.

லாபத்தை எடுத்தவுடன் நாம் போதும், லாபம் என்று கட்டுப்பாடுடன் இருப்போமா? என்றால், பெரும்பான்மையானவர்கள் அவ்வாறு இருப்பதில்லை. இன்னும் லாபம் எடுத்தால் என்ன, என்ற ஆசை நம்மை இன்னும் கொஞ்சம் வியாபாரம் செய்யத்தூண்டும்.

இந்த செயல்பாடு, படிப்படியாக நம்முடைய கட்டுப்பாட்டை இழக்க செய்யும். கட்டுப்பாட்டை இழந்த வியாபாரிகள் நிலைமை என்ன என்று நான் தனியாக சொல்லி, நீங்கள் தெரிந்துகொள்ள தேவையில்லை.

எடுத்த லாபத்தை இழந்து, பின்பு போட்ட முதலின் பெரும்பகுதியையும் இழப்பது என்பது நாம் அறிந்ததே.

ஆனால், ஒரு குறிப்பிட்ட லாபத்துடன், அன்றைய வியாபாரத்தை நிறுத்துவது என்பது, மனசு சார்ந்த விஷயம். நீங்கள் கட்டுப்பாட்டுடன் செயல்படக்கூடிய நபராக இருந்தால், கண்டிப்பாக, இந்த முறையில் லாபத்தை வெளியே எடுப்பது எளிய முறை ஆகும்.

அடுத்து லாபத்தை எடுக்கும் மற்றொரு முறை:

சந்தையின் போக்கை கணித்து எவ்வளவு லாபம் எடுக்கமுடியுமோ அவ்வளவு லாபம் எடுக்க முயற்சிப்பது.

இந்த முறையில் எல்லோராலும் லாபம் எடுக்க முடியுமா?

கண்டிப்பாக முடியாது.

ஏன்?

முடிந்தவரை அதிகமாக லாபத்தை எடுக்கவேண்டும் என்றால், நீங்கள் சந்தையின் போக்கை அனுமானிக்ககூடியவராகவும், சந்தை திசை திரும்பும்போது, சந்தையில் நீங்கள் வைத்திருக்கும் பொஷிஷனை விற்பவராகவும் மாற வேண்டும்.

சந்தையில் நாம் ஒவ்வொரு முறையும் அதிகபட்ச லாபம் எடுக்கவேண்டுமானால், சந்தை ஏறுமுகமாக இருக்கிறதா அல்லது இறங்குமுகமாக இருக்கிறதா என்று அறிந்து இருக்கவேண்டும். நாம் பின்பற்றும் ஒரு பொருள் இப்போது ஏறுமுகமாக இருந்தால், நாம் வாங்கி விற்க்கும் நபராக இருக்கவேண்டும். அதுவே அந்த பொருள் இறங்குமுகமாக இருந்தால், நாம் விற்று வாங்கும் மனநிலையில் இருக்கவேண்டும்.

அதிகபட்ச லாபம் எடுக்க முனையும் போது, நாம் சந்தையை கணித்தபடியே அது நகர்ந்து கொண்டு இருந்தால், அதுவரை நாம் நம்முடைய பொஷிஷனை வைத்து இருந்தால், லாபம் கூடிக்கொண்டே போகும்.

இதில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை என்னவென்றால், நாம் ஏறும் என்ற கணித்து வாங்கி வைத்திருக்கும்போது, ஒருவேளை சந்தை இறங்க ஆரம்பித்தால், நாம் அது இறங்குகிறது என்பதை முழுவதும் உணரும் முன்னர், நன்கு இறங்கிவிட்டால், நாம் என்ன செய்வோம்?

நாம் என்ன செய்வோம், என்பது நமக்கு நாமே கேட்கும் கேள்வியாக இருந்தாலும், இதில் நாம் செய்யக்கூடியது இரண்டு விஷயங்களே.

ஒன்று, நட்டத்தை ஏற்றுக்கொண்டு வெளியே வருவது. அப்போது, நட்டம் என்பது கணிசமாக இருக்கலாம் என்பதை மனதில் கொள்ளவேண்டும். இவ்வாறு நாம் நட்டத்தை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அடுத்து, நாம் நம்முடைய பொஷிஷனை, எதிர்மறையாக எடுத்து செயல்படவேண்டும்.

அதாவது, நாம் ஏற்கெனவே லாங் போயிருந்து, அதில் நட்டம் இருக்கும்பட்சத்தில், அந்த நட்டத்தை ஏற்றுக்கொண்டு, அடுத்து நாம் ஷாட் போவதற்க்கு தயாராக இருக்கவேண்டும்.

இதுவும் சொல்லுவது எளிது. ஆனால், செய்வது மிக மிகக் கடினம்.

ஏனெனில், நம் மனது, எதையும் அவ்வளவு எளிதில் செய்யவிடாது. எனவே நாம் செய்ய நினைப்பதை எல்லாம், கொஞ்சம் தள்ளிப்போட வைக்கும். முதலில் நாம் வாங்கிய பின் இறங்கி நட்டம் வந்தால், உடனே நட்டத்தை மனது ஏற்றுக்கொள்ளாது.

பின்பு மென்று விழுங்கி, மெள்ள மெள்ள நட்டத்தை ஏற்றுக்கொள்ளும்போது, நட்டத்தின் அளவை பொருத்து நாம் வலியில் இருப்போம். எனவே நட்டத்தில் அந்த பொஷீஷனை விற்ற பிறகு, நாம் மனரீதியாக சாதாரணநிலையை அடைய கொஞ்சம் நேரம் எடுக்கும்.

சிறிது இடைவெளி கொடுத்து சந்தையை பார்க்கும்போது, நாம் நட்டத்தில் விற்ற பொருளின் விலை வெகுவாக இறங்கி இருக்கும். அதை பார்க்கும்போது நமக்கு மனதில் ஒரு சந்தோஷம். பரவாயில்லையே நாம் முன்னதாகவே வெளியே வந்துவிட்டோம்.

ஆனால், ஒரு வியாபாரியாக, நாம் கணித்தபடி, அந்த குறிப்பிட்ட எல்லையை தாண்டி இறங்கினால், வலுவாக இறங்கும் என்பது சரியானதே.

விலையும் இறங்கிக்கண்டுதான் இருக்கிறது.

ஆனால், நாம் அதில் பங்குபெற்றோமா?

இல்லை என்பதுதான் விடை.

நாம் கணித்தபடியே விலையானது, நாம் படித்த ஒரு குறிப்பிட்ட ஆதரவு எல்லையை உடைத்து இறங்கும்போது பலமான இறங்கி உள்ளது.

நம்மால் அதில் பங்கு பெறமுடியவில்லை.

ஏனெனில், ஏற்கெனவே நாம் அடைந்த நட்டத்தில் இருந்து நாம் மனரீதியாக வெளியே வரமுடியவில்லை. இதை சொல்வதற்க்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும், அதுதான் நிஜம்.

நாம் கொஞ்சம் நேரம் அந்த சோகத்தை கொண்டாடி இருக்கிறோம். அதை கொண்டாட்டம் என்று சொல்வதைவிட, நாம் சுயஇரக்கதில் சிறிது நேரம் கழிக்கிறோம். அந்த சுய இரக்கம் என்பதும் ஒரு மயக்கம்தான். இந்த மயக்கத்தில் இருந்து நாம் விடுபட்டு, பின் என்ன நடக்கிறது என்ற நடைமுறை நிஜத்திற்க்கு வெளியே வருவதற்க்குள் நம் வியாபாரம் செய்யும் பொருளின் விலை வெகுவாக இறங்கி இருக்கும்.

அதாவது, நாம் கணித்து இருந்த எல்லையை தாண்டி கீழே இறங்க ஆரம்பிக்கும்போது, நாம் ஷாட் பண்ணி இருந்தால், இந்த இறக்கம் நமக்கு பெரிய லாபத்தை கொடுத்து இருக்கலாம்.

ஆக சந்தையையொட்டி செயல்படுபவராக இருந்தால், சந்தை ஏறுமுகமாக இருந்தால், லாங் போவதும், சந்தை இறங்குமுகமாக மாறும்போது ஷாட் போவதும் சகஜமான ஒன்றாக இருக்கவேண்டும்.

இதை நீங்கள் செய்யும் நபராக மாறும்போது, உங்களை புரஃபொஷனல் டிரேடர் என்று அழைப்போம்.

இப்படி புரொஃபஷன்ல் டிரேடராக மாறுவதற்க்கு உங்களுக்கு மனரீதியான் கட்டுபாட்டுகள் வரவேண்டும்.

இந்த கட்டுப்பாட்டு இரண்டு வகையில் உங்களுக்கு வரும்.

    அனுபவம்.

    தொடர்ந்து நம்மை பயிற்சிக்கு உட்படுத்துதல்.

அனுபவம் என்று சொல்லும்போது, எல்லோருடைய அனுபவமும் கைகொடுக்காது. தங்கள் செயல்பாடுகளை குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்படுத்தி, அதையே தொடர்ந்து செயல்படுத்துபவர்களுடைய அனுபவம் மட்டுமே இதற்க்கு உதவும்.

அடுத்து தொடரந்து பயிற்வித்தல் என்பதே, சரியான ரிசல்ட் கிடைப்பதற்கான வழிமுறை ஆகும்.

பயிற்வித்தல் என்று சொல்லும்போது, சரியாக பயிலகூடிய இடத்தில், சரியான முறையிலும், குறுக்கு வழியில் பயிற்றுவிக்க நேரிடும்போது, நாம் குறுக்குவழி என்பதை அறியாமல், அந்த வழியிலும் செல்ல ஆரம்பித்துவிடுவோம்.

ஆகவே சரியான முறையில் நாம் நம்மை தயார் செய்வதன் மூலம், லாபத்தை நமக்கு உகந்த முறையில் எடுக்கும்போது, நாம் அந்த துறையில் ஒரு புரொஃபஷனல்லாக மாறுகிறோம்.

அப்படி மாற இன்னும் என்ன செய்யவேண்டும். தொடரந்து பார்ப்போம்.

Source :
http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=9409

   

Read more...

Commodity A2Z-25

Sunday, March 13, 2016

கமாடிட்டி A-Z தொடர் 25

கமாடிட்டி வியாபாரம் 25

தி.ரா.அருள்ராஜன்

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

கமாடிட்டி நாம் செய்யக்கூடியது வியாபாரம் மட்டுமே.

அதுவும் இது ஃபியூச்சர்ஸ் வகை வியாபாரம் ஆகும். அதாவது, வாங்க வேண்டிய எண்ணிக்கை என்பது ஏற்கெனவே எக்ஸ்சேஞ்ச் நிர்ணயித்துள்ளது. எனவே நாம் வாங்க நினைக்கும்போது எக்ஸ்சேஞ்ச் நிர்ணயித்த எண்ணிக்கையில்தான் வாங்கவேண்டும் அல்லது விற்கவேண்டும். இதைத்தான் நாம் லாட் என்கிறோம்.

இது நாம் நன்கு அறிந்ததே.

என்னங்க... இதெல்லாம் எனக்கு தெரியுங்க. எதுக்கு இப்படி ஒரு முன்னுரை? என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. காரணம் இருக்குங்க.

கமாடிட்டி சந்தையில், வியாபாரம் என்பதால், ஒன்று அந்த வியாபாரம் லாபத்தில் முடியவேண்டும் அல்லது நஷ்டத்தில் முடிய வேண்டும்.

நடைமுறையில் பார்க்கும்போது, பெரும்பாலானவர்கள் இந்த வியாபாரத்தில் நஷ்டத்தில்தான் முடிக்கிறார்கள்.

இதற்க்கு என்ன காரணங்கள் என்பதை ஆராயத்தான் இந்த கட்டுரை.

கமாடிட்டி சந்தையில் நாம் நட்டம் அடையும்போது, அதற்கான காரணங்கள் என்று தேடும்போது, நமக்கும் சொல்லத்தோன்றுவது எல்லாம் என்ன?

எப்போதும் போல இரண்டு காரணங்கள்.....

    நான் வாங்கினால், இறங்கிவிடுகிறது.

    நான் விற்றால், ஏறிவிடுகிறது.

என்னங்க அவ்வளவுதானா? இன்னும் இருக்கா?

இன்னும் இருக்கே, நான் வாங்கிட்டு ஸ்டாப் லாஸ் போட்டா, கரெக்ட்டா, அதை டிரிகர் பண்ணிட்டு, அப்புறம் நல்லா ஏறிடுது சார்.

அப்புறம்....

ரூ.20,000, ரூ.40,000 இப்படி பணத்தை செலவழித்து சாப்வேர் வாங்கினேன் சார்.

அதானல என்ன?

நான் குரூட் ஆயில் வியாபாரம் பண்ணேன். சாஃப்ட்வேர்ல, விற்கறத்துக்கு சிக்னல் காட்டிச்சி சார்? அப்ப விலை ரூ. 2970

ஓகே.

நானும் ஒரு குரூட் மெகாவில ஒரு லாட் ஷாட் போனேன். அப்புறம் மெள்ள விலை ஏறி 2985, 2990ன்னு ஏறிடிச்சி, அப்புறம் 3000 தொட்டவுடனே, சாப்வேர் வாங்கறத்துக்கு சிக்கனல் காட்டிச்சி.

சரி....

சாஃப்ட்வேர் வித்தவர், எனக்கு ரொம்ப ஸ்டிரிக்கட்டா சொல்லிட்டார் சார்.

என்னன்னு...

சாஃப்ட்வேர், வாங்கச் சொன்ன வாங்கனும், விக்கச் சொன்னா விக்கனும். அப்பதான் நீங்க பெரிய லாபத்தை எடுக்க முடியும்.

சரி.. சரி.. நீங்க என்ன பண்ணீங்க?

சொல்றேன் சார். குரூட் விலை ரூ.3000- தொட்டவுடன், சாப்வேர் வாங்ற சிக்னல் வாந்தவுடன் எனக்கு என்ன பண்றத்துனே தெரியல சார். நான் குரூட் மெகாவில வாங்கினேன். லாட் அளவு 100. இப்ப 25 பாயிண்ட் லாஸ் ஆயிட்ச்சி சார். நானும் வாங்கிட்டேன். இப்ப எனக்கு ரூ.2500 லாஸ் ஆயிட்ச்சி.

அப்புறம் இன்னும் ஒண்ணும் சாஃப்ட்வேர் வித்தவர் சொன்னார் சார்?

என்ன?

சாஃப்ட்வேர் நீங்க பொஷிஷன் எடுத்து ரிவர்ஸ் பண்ணும்போது, டபுளா போவனும் அப்படின்னார் சார்.

சரி.

நானும் குரூட்ல 2995ல ஷாட்டை கவர் பண்ணி, அப்புறம் லாங் போவனும் இல்ல, அதனால, டபுள் லாங் போனேன் சார்.

அப்புறம் என்னாச்சி?

குரூட் விலை 2995ல் இருந்த 3000 போச்சி. நானும் கடவுளை வேண்டிக்கிட்டேன். கடவுளே எப்படியாவது, இன்னும் 20 பாயிண்ட் மேலே எடுத்துட்டு போயிடு, எனக்கு வுட்ட பணம் வந்துடும்.

ஆனா... சார்... சார்.... விலை 3000க்கு அப்புறம் இறங்க ஆரம்பிச்சிட்டுச்சி. மெள்ள மெள்ள 2990, 22980... நானும் உன்னிப்பா பாத்துக்கிட்டே இருக்கேன் சார்.

அப்புறம் என்னாச்சி?

விலை அப்படியே டக்குன்னு 2970 தொட்டுச்சி சார் அப்புறம், சாப்வேர், வாங்கற சிக்னல் காட்டுச்சி சார்.

இப்ப இன்னும் ஒரு 2500 லாஸ் ஆயிட்சே சார். ஆனாலும், சாப்வேர் வித்தவர் சொன்னது நினைவுக்கு வந்துச்சி. சாப்வேர் என்ன காட்டுதோ அதை அப்பிடியே செய்யனும்.

நானும் 2970ல டபுள் ஷாட் அடிச்சேன் சார்.

கேட்கவே கஷ்டமாக இருக்குங்களே? சரி அப்புறம் என்னத்தான் ஆச்சி?

2970ல டபுள் ஷாட் அடிச்சி, பாத்துக்கினே இருக்கேன், அப்புறம் ஏற ஆரம்பிச்சிட்டுச்சு.2990 போனவுடனே எனக்கு இருதயம் அதிகமா துடிக்க ஆரம்பிச்சிடுச்சு. விலை வேமாக 3000க்கு போச்சு சார்.

என்ன பண்ணிங்க?

என்ன சார் பண்றத்து விலை 3000 தொட்டவுடனே, சாப்ட்வேர் வாங்கறத்துக்கு சிக்னல் கொடுத்துடுச்சி சார்.

அப்ப நீங்க என்ன பண்ணீங்க, அதைச் சொல்லுங்க?

நான் என்ன சார் தனியா பண்ணமுடியும். அது என்ன காட்டுத்தோ அதை பண்ணுன்னுதானே சார் எனக்கு இன்ஸ்டிரக்ஷன்.

அதைத்தான் சார் பண்ணேன்.

எனக்கு ரூ.9000 லாஸ் ஆயிட்சி சார். இந்த பணம் என்னோட மாச சம்பளத்தில் பாதி சார். மனசு ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்சி சார். மறுநாள் அந்த சாப்வேர் வித்திவர்கிட்ட போய், ஏங்க நீங்க கொடுத்த சாப்வேர் சொன்னபடித்தான், வியாபாரம் பண்ணேன். ஆனா, எனக்கு ரூ.7500 லாஸ் ஆயிட்சி அப்படின்னு சொன்னேன் சார்.

அதுக்கு அவர் சொன்னாரு, நாலாவது தடைவையா 3000 தாண்டும் போது, மேலே போச்சே அப்ப நீங்க ஏன் வாங்கலா அப்படின்னார் சார். அப்ப வாங்கி இருந்தா, குரூட் 3025வரைக்கும் போச்சே அப்ப உங்க லாசை எடுத்து இருக்கலாமே, அப்படின்னார் சார்.

நாலாவது தடவையாகவா? எனக்கு லேசா மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சி சார். இரண்டு முறை அடிவாங்கின எனக்கு ரூ.9000 லாஸ். அப்படின்னா, எவனாவது, நாலு முறை அடிவாங்கி இருந்தான், அவனுக்கு ரூ.18000 லாஸ் ஆயிருக்கும்.

அப்ப தோணுச்சி சார், நானே எவ்வளவு பாரவாயில்லைன்னு.

ஆனாலும், விட்ட காசை எடுக்கனும்மில்ல சார்.

அதனால....

அதனால.... என்ன சொல்லுங்க?

அப்புறம் மறுநாளும் சாப்வேர் சொன்னபடி பண்ணாலும் முடிவு பண்ணிட்டேன் சார்.

சரி, அப்புறம் எண்ண பண்ணீங்க?

மறுநாள் வேலைக்கு போயிட்டு வந்து, 7 மணிக்கு மேலே சாப்வேர தொறந்து வைச்சிட்டு கவனிக்க ஆரம்பிச்சேன் சார்.

அப்றவும் குரூட் 2980 இருந்துச்சி. அட நேந்தும் இந்த விலைகிட்டதானே டிரேட் ஆச்சி. எனக்கு விடை தெரிந்த கேள்வித்தாளை கையில் வைத்திருப்பது போல இருந்தது. இன்னிக்கு எப்படியும் நேத்து விட்ட ரூ.7500 பிடிச்சிடனும் ஒரு முடிவோட இருந்தேன் சார்.

அப்புறம்.

சாப்வேரை உத்து உத்து பார்த்துக்கிட்டே இருந்தேன் சார். விலை 2880ல் இருந்து 2970க்கு வந்துச்சி. சாப்வேரும் 2970ல் ஷாட் அடிக்க சிக்னல் காட்டிச்சி. நானும் குரூட் மெகா ஒரு லாட் ஷாட் பண்ணேன் சார். அப்புறம் 5 புள்ளி முன்னே நகர்ந்து அப்படியே இருந்துச்சி. அப்புறம் விலை தப தபன்னு மேலே ஏறிச்சி 2980, 2990ன்னு.

நானும் யோசிக்க ஆரம்பிச்சேன் சார். நேத்தும் இப்படித்தானே ஆச்சி. அப்புறம் 3000 வந்துச்சி சார். சாப்வேர் இப்ப வாங்கறத்துக்கு சிக்னல் காட்டும்னு பார்த்தேன் சார்.

சிக்னல் வரல...

அப்படின்னா? சாப்வேர் இன்னும் ஷாட் அடிக்கிற சைட்லதானே இருக்கு. ஏற்கெனவே 2970 ஷாட் அடிச்சி, இப்ப ரூ.3000 லாஸ்ல இருக்கோமே. அப்படின்னு, நான் வந்து சார்... வந்து சார்...

சரி, விஷயத்தை சொல்லுங்க.

வந்து சார்... 3000த்ல இன்னும் ஒரு ஷாட் அடிச்சேன் சார்.

பராவாயில்லையே நீங்களும் யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களே!

அவசரபடாதீங்க சார். முழுசா கேளுங்க சார். நான் 3000த்துல இன்னும் ஒரு ஷாட் அடிச்சேனா, அப்புறம் 3010க்கு போச்சி சார்.

எனக்கு கை, காலு எல்லா வெட வெடன்னு ஆட ஆரம்பிச்சிடுச்சி சார். அப்புறம் விலை 3020 போனவுடனே, சாப்வேர் வாங்கறத்துக்கு சிக்கனல் காட்டிச்சி சார்.

எனக்கு என் குடியே முழுகி போச்சின்னு தோணுச்சி சார்.

எனக்கு இப்ப எவ்வளவு லாஸ் ஆச்சின்னு கணக்கு போட்டு பார்த்தேன் சார். 2970ல அடிச்ச ஷாட்ல 50 பாயிண்ட் லாஸ். 3000த்ல அடிச்ச ஷாட்ல 20 பாயிண்ட் லாஸ். ஆக மொத்தம் 70 பாயிண்ட் லாஸ். அப்படின்னா, இப்ப எனக்கு ரூ.7000/- லாசா?

என் மனம் அதை ஏற்க மறுத்தது சார்.

சரி, இப்ப வித்தை வாங்கி, டபுள் லாங் போனிங்ளா இல்லையா?

என்ன சார் சொல்றீங்க.... இப்ப நான் ரூ.7000 நஷ்டத்தில் இருக்கேன். இப்ப எப்படி சார் நான் புக் பண்ணுவேன்? அதானால, நான் கொஞ்சம் வெயிட் பண்ணேன் சார். விலையை அப்படியே முறைச்சி பார்த்துக்கிட்டு இருந்தேன். விலை அப்படியே மெள்ள 3030, 3040, 3050 அப்படின்னு ஏற ஆரம்பிச்சிடுச்சி சார்,

நான் கண்ணல விலையா பார்கிறேனே தவிர் என் மூளை வேலை செய்யவே இல்லை சார். அப்படியே விலையை மொற்ச்சி பார்த்துட்டு இருக்கிறேன். அப்புறமா கொஞ்சம் சுரணை வந்து யோசிக்கும்போதுதான், அட என்னோட லாஸ் கூடிக்கிட்டே போகுதே அப்படின்னு தெரிஞ்சுது. மணிய பார்த்தேன் 11.15. சாயந்திரம் ஏழு மணிக்கு இந்த கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தவன். இதுவரைக்கும் சாப்பிடகூட போகலை. என்னோட மனைவியும், சாப்பிட இரண்டு முறை கூப்பிட்டும் போகவில்லை. எப்படி சார். நஷ்டத்தில் இருக்கிறப்ப, எப்படி சாப்பாடு இறங்கும்.

மணி 11.20 ன்னு நகர ஆரம்பித்த்து. மார்க்கெட் 11.30க்கு முடிந்துவிடும். ஸ்கினை பார்த்தா, சிவப்பும் பச்சையும் மாறி மாறி வருது, விலை எல்லா மள மளவென்னு மாறுது. குரூட் விலை 3050 இருந்து டப டபன்னு 3060, 3070, 3080ன்னு எகிற ஆரம்பிச்சிடுச்சி. எங்கிட்ட இரண்டு லாட் கேரி பண்ற அளவுக்கு பணம் இல்லை. ஓடிப்போய் 3090 இரண்டு மெகாவையும் கவர் பண்ணினேன் சார்.

எனக்கு இப்ப எவ்வளவு நஷ்டம்?

மனசு கணக்கு போட மறுத்தது. அதை நினைக்கும்போது வலித்தது.

இருந்தாலும் கணக்கு தெரியவேண்டும் அல்லவா?

முதல் லாட் 2970ல ஷாட், இப்ப 3090ல கவர் பண்ணிட்டேன். இதில் 120 பாயிண்ட் லாஸ். இரண்டாவது, ஷாட் 3000 பண்ணி 3090ல கவர் பண்ணேன். அதில 90 பாயின்ட் லாஸ். ஆக மொத்தம் 210 பாயிண்ட் லாஸ்.

அப்படின்னா? எனக்கு அதை எண்ணிக்க மனசு துணியவில்லை.

அப்படின்னா?

இன்னக்கி லாஸ் 210 பாயிண்ட், லாட் அளவு 100, ஆக ரூ.21000 லாஸ்.

இது ஒரு மாச சம்ளம். ஒரே ராத்திரில போயிட்ச்சி.

மணி இரவு 12. திரும்பி பார்க்கிறேன், என் மனைவியும், குழந்தையும் ஆழ்ந்த உறக்கத்தில், சம்பாதிக்கும் குடும்பத்தலைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில்.

எப்போது தூங்கினேன் தெரியல சார். காலையில அரக்க பரக்க ரெடியாகி ஆபிசிக்கு போனேன். ஒரு 11 மணி இருக்கும். ஒரு போன் வந்துச்சி. யாருன்னு பார்த்தா, அந்த சாப்வேர் வித்தவர். வேண்டா வெறுப்பா, போனை எடுத்தேன்.

சொல்லுங்க...

என்ன சார், எங்க சாப்வேர் நேத்து குரூட் ஆயில்ல 3030ல் வாங்க சிக்னல் கொடுத்துச்சி, அப்புறம் 3090வரைக்கு போச்சி. ஒரு லாட்டுக்கு ரூ.7000 லாபம். நீங்க எத்தனை லாட் எடுத்தீங்க, எவ்வளவு லாபம் பார்தீங்க...

அவர் பேசிக்கொண்டே இருந்தார். நான் போனை கட் பண்ணினேன்.

அவர் வியாபாரத்தை அவர் பார்கிறார்.

என்ன சார் நான் கதைய சொல்லும்போது உங்களுக்கு ரொம்ப போர் அடிச்சதா?

இல்லைங்க, நீங்க கரெக்ட்டாதான் சொல்றீங்க. அவர் வியாபாரத்தை அவர் பார்கிறார். ஆனா... சார், உங்க பணத்தை பார்க்கவேண்டிய கடமை உங்கக்கிட்டதான் இருக்கு.

உங்களுடை இந்த அனுபவம் உங்க அனுபவம் மட்டும் இல்லீங்க. பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கு. இதுக்கு தீர்வை நோக்கித்தான் போகவேண்டுமே தவிர, இவர்களை திட்டிக்கொண்டு இருப்பதால், உங்கள் பணம் திரும்ப வந்துவிடுமா?

உங்கள் பணத்திற்க்கு நீங்கள்தான் பொறுப்பு. அப்புறம் உங்களை தகுதிபடுத்திக்கொண்டுதான் இந்த வியாபாரத்தில ஈடுபடனும். அதுக்கு முறையான ஒரு பயிற்சியை எடுத்துங்க.

அது எப்படின்னு அடுத்த கட்டுரையில பார்க்கலாம்.

கமாடிட்டி டிரேடிங்கில் நான் ஒரு புரொஃபஷனலாக மாற வேண்டும்.

இதுதான் என்னுடைய தேவை.

இந்த இடத்தில் நாம் புரொபஷனலாக மாறவேண்டுமானால்...

கொஞ்சம் கொஞ்சமாக பணம் போட்டு கண்ணுக்கு தெரியாமால் இழந்துகொண்டு இருப்பது, நம் முழு சொத்தையுமே அழித்துவிடும்.

இதில் வியாபாரம் செய்யவேண்டுமானால், ஒரு வியாபாரியாக என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் செய்யவேண்டும்.

நோ டிப்ஸ்...

நோ டிரிக்ஸ்...

ஒன்லி எஜுகேஷன்.
http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=9481

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP